சிரியாவில் நடைப்பெறும் மனித படுகொலைகளுக்கு காத்திரமான நடவடிக்கைகளை  வேண்டும் – அன்ரனி யேசுதாசன்!

சிரியாவில் நடைப்பெறும் மனித படுகொலைகளுக்கு எதிராக  ஐக்கிய நாடுகள் சபை காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மனித உரிமைகள் செயற்பட்டாளர் அன்ரனி யேசுதாசன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

ஆவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். ஆந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2008, 2009ம் ஆண்டுகளில் இலங்கையில் நடந்தேறிய கொடுமை நிலைமை இன்று சிரியாவில் நடந்து வருகின்றது. மனித நேயத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற கொடூர யுத்தத்தை கடுமையாக எதிர்க்கின்றோம்.

2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த கொடூர நிலைமையை சர்வதேச நாடுகள் கண்டுகொள்ளவில்லை. அதனால் பல்லாயிரக் கணக்கான உயிர்களை நாம் இழக்க நேரிட்டது. கொலைகளுக்கு அப்பாலான வன்முறைகள், குற்றங்கள் பல. எனினும் சர்வதேசம் பாராமுகமாயிருந்தது. யுத்தம் நிறைவடைந்த பின் மனித உரிமை மற்றும் மனித நேயம் பற்றி கதைக்க தொடங்கிய சர்வதேச நாடுகள் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் மக்களை காப்பாற்றுவதற்கான செயல் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முற்படவில்லை. இதே நிலைமை இன்று சிரியாவில் நடைப்பெற்று வருகின்றது. இதனால் மக்கள் நாளுக்கு நாள் இறந்தவண்ணம் உள்ளனர். இறுதியாக நாம் எத்தனை உயிர்களை இழக்க நேரிடுமோ என்ற அச்சம் நிலவுகின்றது

மனித உரிமைகள், மனித நேயம் பற்றி அக்கறை செலுத்துகின்ற நாடுகள் ஏன் மௌனமாக இருக்கின்றன என புரியவில்லை. ஒரு சில நாடுகள் இந்த யுத்தத்திற்கு எதிராக குரல் எழுப்பினாலும்  அது பெரிதாக எடுபடவில்லை. எனவே இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனின் மக்கள் சகலரும் அழிந்த பின் மனித உரிமை மற்றும் நிலைமாறுகால நீதியை பற்றி கதைக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை தொடர்பான 37வது கூட்டத் தொடரில் இது தொடர்பான விசேட கலந்துரையாடலை நடாத்தி தீர்க்கமான முடிவுகளை எடுத்து மக்களை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்வதோடு.

சகல நாடுகளும் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அத்தோடு சமாதானத்தையும் மனித நேயத்தையும் விரும்புகின்ற சகல மக்களும் சகல நாடுகளும் உலக முழுவதுமாக தற்போது நடைப்பெற்று வரும் யுத்தங்களுக்கு எதிராகவும், அணு ஆய்வு பரிசோதனைகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளனூடாக பாதிக்கப்படுவது அப்பாவி மக்களும், ஏழை மக்களுமே. எனவே இது தொடர்பான செயற்ரீதியான நடவடிக்கைகளை சகல தரப்பினரும் மேற்கொள்ள வேண்டும்

அத்தோடு சர்வதேச யுத்த முறைகளுக்கு எதிர்மாறாக செயற்படுகின்றவர்களையும், இதுவரை செயற்பட்டவர்களையும் சர்வதேச சட்டத்தின் முன் நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை நிலை நிறுத்த வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை தொடர்பாக மக்கள் இன்னமும் கொஞ்சமாவது நம்பிக்கை வைத்திருப்பதால் மற்றும் பாதிக்கப்படுகின்ற மக்கள் ஐக்கிய நாடுகள் சபையை நம்புவதால் தனது பொறுப்புக்கூறலையும், வகிபங்கையும் சரியாக நிலைநாட்ட வேண்டும். அதே நேரம் இலங்கை தொடர்பான அதி கவனத்தைச் செலுத்தி 30ஃ1 ஐநா தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் சரியான முறையில் நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்