வட்டுக்கோட்டை பொலிஸாருக்குத் தண்ணி காட்டும் மர்ம மனிதர்கள்: அச்சத்தில் மக்கள்!

வட்டுக்கோட்டை பிரதேசத்தின் முக்கியத்துவம் மிக்க சங்கரத்தை மற்றும் மாவடிச் சந்திக்கு இடைப்பட்ட பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் திடீர் திடீர் என வந்துபோகும் மர்ம மனிதர்கள் வீதிகளால் செல்லும் அப்பாவி மக்களைத் தாக்கியதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

நேற்றையதினம் சங்கரத்தை சந்திக்கும் மாவடிச் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் சீரான நேர இடைவெளியில் மூன்றுக்கும் மேற்பட்ட தடவை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் இலக்கத் தகடுகளை மறைத்தும் தமது முகத்தை கறுப்புத் துணியால் கட்டியவாறும் வந்த 6 மர்ம மனிதர்களே வீதியால் சென்ற பலரை பொல்லுகளால் தாக்கியும் வாளால் வெட்டியும் அச்சுறுத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் நடைபெற்று சிலமணி நேரம் கழித்து மீண்டும் அப்பகுதிக்கு வந்த குறித்த 6 மர்ம மனிதரகளும் வீதியால் சென்றவர்களை மீண்டும் கடுமையாகத் தாக்கியதுடன் வாளால் வெட்டியும் காயப்படுத்தியுள்ளனர்

இச்சம்பவத்தில் சித்தன்கேணி அந்திராணி வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதுடன் மாவடிப் பகுதியைச் சேர்ந்த ஒருவரது கையும் பொல்லால் அடித்து முறிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தை பலர் நேரில் கண்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் உடனடியாக முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தை அறிந்த வட்டுக்கோட்டைப் பொலிசார் உடனடியாக நடவடிக்கையில் இறங்கி குறித்த மர்ம நபர்கள் தொடர்பில் தேடுதல் நடத்தியபோதும் எதுவிதமான தடயங்களும் இதுவரை கிடைக்கப் பேறவில்லை என்பதுடன் எவரும் கைதும் செய்யப்படவில்லை என தெரியவருகின்றது.

இந்நிலையில் நேறையதினம் வட்டுக்கோட்டை பண்ணாகம் பகுதியில் சுமார் 75 கிலோ கேரளக் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டும் உள்ளநிலையில் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளதானது மக்கள் மத்தியில் பலவாறு பேசப்பட்டு வருவதுடன் அப்பகுதி பெரும் பதற்றம் நிறைந்ததாகவும் காணப்படுகின்றது.

இதனிடையே கண்டியில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையே தூண்டிவிடப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ள இனவன்முறையானது பெரும் தீயாகப் பற்றி எரிந்து வரும் நிலையில் அது மெது மெதுவாக வடக்கு நோக்கியும் சென்றடைவதற்கு சில தீய சக்திகள் முயற்சிக்கவும் செய்வார்கள் என பரவலாக பேசப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்