கட்டுப்படுத்தப்படும் முகநூல் தொடர்பாடல்: அடக்கப்படுமா போலி முகங்கள்?

கண்டி இனக்கலவரம் இலங்கை அரசியலை மட்டுமல்லாது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தள பாவனையாளர்களையும் ஆட்டங்காண வைத்துள்ளது.

வன்முறையைத் தூண்டுவதாகக் கூறி தற்காலிகமாக நிறுத்தப்பட்ட முகநூல் கணக்குகள் இன்னும் மீள் திரும்பாமைக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இலங்கை அரசு குறித்த சம்பவத்தை காரணங்காட்டி முகநூல் கணக்கின் தாக்கத்தை இலங்கையில் அதிகளவு குறைக்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளது என்றே சொல்லாம்.

அரசாங்கம் அவ்வாறு செய்வதற்குக் காரணம் இருக்கத்தான் செய்கின்றது. நாட்டில் இன வன்முறையை மட்டுமல்லாது சமூகங்களிடையே சீரழிவுகளையும் இளவயதினரை தவறான வழியில் செல்ல தூண்டுவதுடன் பல்வேறுபட்ட மரணங்களுக்கும் இந்த முகநூல் தளம் களமமைத்துள்ளது.

இதனால் இந்தத் தளத்தை தடைசெய்வதற்கு இலங்கையின் 75 சதவீதமான மக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக செய்திகளும் வெளியாகியுள்ளது.

ஆனாலும் குறித்த தளத்தை மீளவும் இலங்கையில் இயங்கச் செய்ய பேஸ்புக் நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்க தரப்பிற்கு இடையில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ள நிலையில் கடுமையான சட்ட வரைமுறைகளுக்குள் இயங்க அனுமதிப்பதனூடாக ஓர்  இணக்கப்பாட்டிற்கும் வந்துள்ளதாக அந்த நிறுவனம்தெரிவித்துள்ளது.

மக்களையோ அன்றி தனி நபரையோ கோபப்படுத்தும் அல்லது அவதூறு பரப்பும்  தகவல்களைப் பரிமாறுதல் மற்றும் பதிவிடலை தடுப்பது தொடர்பில் மிக முக்கியமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த விடயங்களை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் உதவி அவசியம் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் எதிர்வரும் காலங்களில் இலங்கை அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் உதவியுடன் இனவன்முறைகள் மற்றும் அவதூறுகளை பரப்பும் தகவல்கள் பரிமாறுபவர்களுக்கு எதிராகச் சட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும்  அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையர்களினால் திறக்கப்படும் பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படுகின்ற நிலையில் அவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்துத் தகவல் பரிமாற்றங்களையும் கண்காணிப்பதாகவும், இலங்கையர்களின் கணக்கு தொடர்பில் கடுமையான கொள்கை நடைமுறைப்படுத்துவதற்கு பேஸ்புக் நிறுவனம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

அந்தவகையில் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து பிரச்சார நடவடிக்கைகளையும் நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் அவ்வாறான கணக்குகளை முழுமையாக நீக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதாக பேஸ்புக் நிறுவனம் இலங்கை அரசிடம் ஒப்புதல் கொடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

மேலும் பேஸ்புக் கணக்கு ஒன்றை ஆரம்பிக்கும் போது வாடிக்கையாளரால் வழங்கும் தொலைபேசி இலக்கத்தின் உரிமையாளர் அந்த கணக்கிற்கான அனைத்து பரிமாற்றங்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும் என்ற  நிபந்தனையும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன்

ஒரு நபரின் புகைப்படம் கணக்கிற்கு வழங்கப்பட்டிருந்தால் அந்த புகைப்படத்திற்கு உரிமையுடையவர் தவறு செய்திருந்தால், அது தொடர்பில் பேஸ்புக் நிறுவனத்திற்கு சந்தேகம் வருமாயின் குறித்த கணக்கிற்கு தகவல் ஒன்று அனுப்பப்படும் என்றும் 3 நாட்களுக்குள் குறித்த கணக்கின் உரிமையாளர் பதிலளிக்கவில்லை என்றால் அந்தகணக்கு பகிரங்கப்படுத்தப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளதுடன் அதனைத் தொடர்ந்து 7 நாட்களுக்குள் கணக்கு பேஸ்புக் வலைத்தளத்தில் இருந்து நிரந்தரமாக நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கதொன்றாகவே இருக்கின்றது.

தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ச்சி கண்டுள்ளதோ அதே அளவு கலாச்சாரங்களும் அழிவு கண்டுள்ளன. குறிப்பாக இந்த வசதிகள் அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் காதலர்களாக இருந்தாலும் சரி கணவன் மனைவியாக இருந்தாலும் சரி ஏன் நண்பர்கள் உறவினர்களாக இருந்தாலும் சரி தமது தொடர்புகளை தொலைபேசியிலோ அன்றி கடிதங்கள் மூலமே பரிமாறிக்கொண்டனர்.

ஆனால் இவை வருகைதந்த பின்னர் கடித மூலமான பரிமாற்றம் அழிந்துபோய்விட்டது. காதலர்கள் தத்தமது காதலரின் கடிதங்களுக்காக நாட்களை எண்ணிக்கொண்டிருந்த காலம் மறக்கப்பட்டது. இந்த நெருக்கம் தான் இன்று காதலர்களாக இருப்பவர்களும் நண்பர்களாக இருப்பவர்களும் தவறுகளை செய்துகொள்ள சந்தர்ப்பத்தை கொடுத்துள்ளது.

அது மட்டுமல்ல இன வன்முறையை ஒரு சில நிமிடங்களில் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றது. சட்டத்திற்கு முரணாக பலர் பல நூறு முகநூல்களை உருவாக்கி அதனூடாக தமது நலன்களை முன்னிறுத்தி செயற்பட்டுவருவதால் பல ஆயிரம் பேர் நாளாந்தம் பாதிக்கப்பட்டும் மன விரக்திக்குள்ளாகி தற்கொலை செய்தும் உள்ளனர்.

இந்த அதிதுரித பரிமாற்ற சேவை ஆக்கத்திற்காக அன்றி அழிவுகளுக்காகவே எமது நாட்டில் அதிகளவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறியமுடிகின்றது.

இந்நிலையில் கண்டிச் சம்பவத்தை தூண்டிவிட்டதனால் முகநூலும் நீதிமன்று செல்லவேண்டிய நிலை உருவாகிவிட்டது. இதன் தாக்கத்தை அறிந்தே ஜனாதிபதி மைத்திரி உடனடியாக சமூகவலைத் தளங்கள் பக்கம் தனது பார்வையைத் திருப்பி அவற்றை கட்டுப்படுத்த முயற்சித்து வெற்றி கண்டுள்ளார்.

முகநூல் உரிமையாளர் வெளிப்படையாக இருக்கும் பட்சத்தில் நேர்மையான பதிவுகளும் உண்மையான செய்திகளும் நாளாந்தம் உலவ வாய்ப்புள்ளது. உண்மை நிலைமையை கண்டுகொண்டு அதனூடாக நடவடிக்கைகளும் முன்னெடுக்க ஏதுவாக அமையும்.

எனவே வரவுள்ள சட்டம் பலருக்கு மனவேதனையைத் தந்தாலும் நாட்டுக்கும் பொது மக்களுக்கும் நலனுள்ள சட்டமாக அறிமுகப்படுத்தப்படுவதால் அதை ஏற்றுத்தான் ஆகவேண்டும். இதுவே காலத்தின் தேவையுமாகும்.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்