வடக்கில் போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸாரின் அடாவடி அதிகரிப்பு: அப்பாவி சாரதிகள் பரிதவிப்பு!

வடக்கு மாகாணத்தில் வீதிப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற பொலிஸாரின் முறைகேடுகளால் நாளாந்தம் சாரதிகள் தாம் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதிப் போக்குவரத்து பொலிஸாரின் அடாவடித்தனங்கள் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதால் தாம் வாகனங்களை சரியாக செலுத்தினால் கூட உண்மைக்கு புறம்பான காரணங்களை கூறி பொலிஸார் வழக்கு பதிவு செய்வதாகவும் இதனால் தாம் மிகுந்த வேதனைகளை மட்டுமல்லாது சட்டத்தின் முன் தப்புகள் ஏதும் செய்யாத நிலையிலும் கூட ஒரு குற்றவாளியாக நிறுத்தப்பட்டு தண்டப்பணங்கள் செலுத்தவேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவாகியுள்ளதாகவும் சாரதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்..

மேலும் பொலிஸாரின் அடாவடித்தனங்களால் பாதிக்கப்பட்ட சாரதிகள் குறிப்பிடுகையில்  –

சில தினங்களுக்கு முன்னர் கனகராயன்குளம் பகுதியில் வீதிப் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் சாரதி ஒருவரை மிரட்டி வழக்கு பதிவதையும் அவர் தனக்கு என்ன விதிமுறை மீறியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது என வினவியபோது வெள்ளைக் கோட்டில் வாகனத்தை முந்திச் சென்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அவ்வாறான சம்பவம் எதுவும் அங்கு பதியப்பட்ட காணொளியில் காண்பிக்கப்படவில்லை. இருந்தும் குறித்த வாகன சாரதி தான் அவ்வாறு முந்திச் செல்லவில்லை என கூறியபோது மற்றைய பொலிஸார் வலக்கை பக்கமாக வாகனம் செலுத்தியதாக குற்றம் சுமத்துகின்றதை அவதானிக்க முடிகின்றது.

இதனிடையே குறித்த சாரதி தனக்கு தமிழில் வழக்கை எழுதி தரும்படி கோரியபோது சிங்களத்தில் தான் தர முடியும் என்றும் அவ்வாறு தமிழில் தரமுடியாது என்றும் இலங்கையில் சிங்களம் மட்டும் தான் தேசிய மொழி என்றும் குறித்த சாரதியை மிரட்டும் வகையில் எச்சரிப்பதையும் குறித்த காணொளியில் பதிவாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இதனிடையே இலங்கையின் வடக்கு – கிழக்கு பகுதியில் தமிழ் மக்களது வழக்குகளை தமிழில் பதியப்பட வேண்டும் என பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டு அது பரவலாக நடைபெற்று வரும் நிலையில் குறித்த பொலிஸார் சிங்களம் மட்டும்தான் இலங்கையின் தேசிய மொழி என திமிராகத் தெரிவித்துள்ளதானது தமிழ் மக்களையும் தமிழ் மொழியையும் சிங்கள பொலிஸார் எவ்வாறு கையாள்கின்றனர் என்பதை எடுத்துக்காட்டியுள்ளதாக கல்விமான்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்