புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடைந்தார் – சொல்கிறார் டக்ளஸ்!

புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடைந்தார் என்றே கூறப்படுகின்றது. இந்த நேரத்தில் ஆதாரபூர்வமாக நான் கூறவிரும்பவில்லை. போரில் சரணடைந்தால் யார் என்றாலும் மனித நேயத்துடன் நடத்தி இருக்க வேண்டும். புலிகளும் அரச படையும் அவ்வாறு நடக்கவில்லை. விடுதலைப் புலிகளின் தலைமை இப்போது முற்றாக இல்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு அண்மையில் சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, அங்குள்ள தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவித்ததாவது –

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல மனித குலத்துக்கே விஷஜந்து. அவரை நான் அப்படித்தான் பார்க்கின்றேன்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போக்கு மக்களையும் அழித்து தங்களையும் அழிக்கும் நிலையையே உருவாக்கும் என்று நான் எப்போதோ கூறியிருந்தேன். அது போலவே நடந்தது. என்னைப் பொறுத்தவரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிரிழந்துவிட்டார்.

ஆனால் அரசியல் உள்நோக்கத்துடன் அவர் உயிருடன் இருக்கின்றார் என்று கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. பிரபாகரன் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல மனித குலத்துக்கே விஷ ஜந்து என்றே நான் அவரைப் பார்க்கின்றேன். அவர் மக்களுக்காக போராடுவதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால் என்ன நடந்து முடிந்துள்ளது.

இந்தியப் படையை தாக்கி விரட்டியடித்த போது உலகத்தில் நான்காவது இடத்தில் இருந்த படையை விரட்டி விட்டோம் என்று கூறியிருந்தனர். ஆனால் உலகில் 35 ஆவது இடத்தில் உள்ள இலங்கை இராணுவத்தை வெல்ல முடியவில்லை. அவர்கள் விவேகமாக செயற்படவில்லை. அதனால் ஏராளமான உயிரிழப்புக்கள் இடம்பெற்றன. இது மட்டுமல்லாது எனது சகோதரர், உறவினர்கள் கடத்தப்பட்டனர்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை நாம் சரியாகப் பயன்படுத்தி இருக்கலாம். போரால் இருப்பதையும் இழந்து உள்ளோம். என்னைக் கூட பல தடவைகள் கொல்ல முயற்சித்தும் புலிகளால் முடியவில்லை. தமிழ் மக்கள் இப்போது எல்லாவற்றையும் இழந்து உள்ளனர்.

புதிய அரசு உருவாகி ஒரு வருடத்தில் முக்கிய தீர்வுகள் கிடைக்கவிட்டால் பின்னர் கிடைக்காது. அது ஆறிய கஞ்சி பழங் கஞ்சி ஆகிவிடும் என்றார்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்