முதல்வர் விக்கினேஸ்வரன் வலி சுமந்த தலைவனா: கடுப்பான யாழ்ப்பாணத்து மக்கள்!

வடக்கு, கிழக்குத் தமிழர்கள் இரத்தமும். சதையுமாக ஈழ விடுதலைப் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கையில், கொழும்பு கருவாக்காட்டில், குடும்பத்தை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, பிள்ளைகளுக்கு பெரும்பான்மை இனத்திலிருந்து பெண்ணெடுத்து சம்மந்தம் செய்துகொண்டபோது சிங்களத்தில் உரையாடியே உதடு வலித்திருக்குமே அந்த வலி சுமந்தவன்.

தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடியபோது, போராளிகளை பங்கரவாதிகளென்று இலங்கைப் படைகள் கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தியபோது, சிறு குற்றத்திற்கும், பெருந்தண்டனை வழங்கி, ஆட்சியாளர்கள் பாராட்டும் நீதியரசராக சாய்வு நாட்காலியில் அமர்த்திருந்தபோது கால் கடுத்திருக்குமே அந்த வலி சுமந்தவன்.

ஈழத் தமிழர்கள் கொடுமையான யுத்தத்திற்கும், பேரழிவுகளுக்கும் முகம் கொடுத்து, இரத்தக்கண்ணீர் வடித்தபோது, அந்த மக்களின் நியாயத்தையும், உணர்வுகளையும் தென் இலங்கை ஆட்சியாளர்களுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் தெளிவுபடுத்துவதில் துளியளவு அக்கறையும் எடுத்துக்கொள்ளாமல், ஓய்வு காலத்தில் கம்பன் விழாக்களிலும், இலக்கிய விழாக்களிலும் கலந்துகொண்டு வாசிப்பதற்கு இரவிரவாக கட்டுரை எழுதியபோது நித்திரை கெட்டதில் கண்கள் வலித்திருக்குமே அந்த வலி சுமந்தவன்.

முதலமைச்சராகும் தகுதி தமக்கில்லை. ஐயா நீங்கள் வந்து அந்தக் கதிரையில் அமரவேண்டும் என்று கூட்டமைப்பின் கோமாளிக்கூட்டம் அழைத்தபோது, தமிழ் மக்கள் நடத்திய போராட்டத்திற்கு ஒரு நீதிவானாக நான் என்ன செய்தேன் என்று சுயவிமர்சனம் செய்துகொள்ளாமல், பதவி என்றதும் பட்டுப்பீதாம்பரம் உடுத்தி வடக்கு நோக்கி நீண்ட பயணம் செய்த போது, ஏ ஒன்பது வீதியின் பயணம் உடல் அசதியை ஏற்படுத்தி இருக்குமே அந்த வலி சுமந்தவன்.

முதலமைச்சரானால் வடக்கிலிருந்து படையினரை வெளியேற்றுவேன் என்றும், படையினர் வசமுள்ள காணிகளை மீட்டெடுப்பேன் என்றும், காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடித்துத் தருவேன் என்றும் மேடை மேடையாய் பொய் வாக்குறுதிகளை வழங்கியபோது எழுதி வாசிக்காமல் மேடையில் உரையாற்றுவது எத்தனை சிரமமானது என்ற வலியை சுமந்தவன்.

முதலமைச்சரானதும், துறைசார்ந்த அறிவாளிகளையே அமைச்சர்களாக்குவேன் என்று மெத்தனப்போக்கோடு அமைச்சரவை அமைத்து, பின்னர் நரிகளின் சாயம் வெளுத்ததுபோல் அந்த அறிவாளி அமைச்சர்கள் ஊழல், மோசடி செய்தார்கள் என்றும், அதிகாரத்து~;பிரயோகம் செய்தார்கள் என்றும் கண்துடைப்பு விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டு அவமானப்பட்ட வலி சுமந்தவன்.

எழுக தமிழ் நடத்தினால், “மு” முதலமைச்சராக செய்த எல்லாத் தவறையும் சரி செய்து தேசிய தலைமையாக தனித்துவம் காட்டலாம் என்று பேரவைக்காரர் கொடுத்த கயிற்றை விழுங்கியதுடன் எதிர்பார்த்த கூட்டம் எழுக தமிழுக்கு வரவில்லை என்ற ஏமாற்றத்துடன் வெயிலில் நின்று அடுத்தவன் குடைபிடிக்க அறிக்கை வாசித்தபோது, தொண்டையில் வறட்சி வலி சுமந்தவன்.

அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா இந்திய சென்றபோது, யாழ்ப்பாணத்திற்கு கலாசார மண்டபம் கண்டித்தர வேண்டும் என்று இந்தியாவிடம் கேட்டதை செயற்படுத்த யாழ்ப்பாணத்திற்கு கலாசார மண்டபம் கட்ட அடிக்கல் நாட்ட வந்திருந்த இந்தியப் பிரதமர் மோடியிடம், சிறுவர் பாலியல் கொலையாளி பிரேமானந்தாவின் விசுவாச சி~;யன் என்பதால், இந்தியச் சிறையிலிருக்கும் பிரேமானந்தாவின் சி~;யர்கள் இருவரை விடுதலை செய்யுமாறு சிறுபிள்ளைத்தனமாக கோரிக்கை விடுத்து, மூக்குடைந்து போன வலி சுமந்தவன்.

முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளில் முதல் மரியாதை கிடைக்கவேண்டும் என்று மாகாணசபையின் பெயரால் முதன்மை ஆளாக நின்றாலும், பெடியல் ஏற்றிக்கொடுக்கும் தீபத்தையே ஏந்தி நின்ற வேளையில், முதுமை காரணமாக முழங்காலில் மூட்டு வலி சுமந்தவன்.

ஐந்து வருடங்கள் மாகாணசபையில் 133 அமர்வுகள் நடத்தியும், 334 தீர்மானங்கள் நிறைவேற்றியும், வடக்கு மாகாணத்திற்கு வந்து சேர்ந்த பயன் ஏதுமில்லை என்று தமிழ் மக்கள் தலையில் அடித்துக்கொள்ளும் ஆளுமையற்ற ஆட்சி நடத்திய குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாது, அடுத்தமுறையும் முதலமைச்சராகும் கனவோடு வாரத்திற்கு ஒரு கேள்வியையும், பதிலையும் தானே எழுதி பத்திரிகைக்கு வழங்குவதில் வயது காரணமாக ஒரு கண்ணயர்ச்சி வருமே அந்த வலி சுமந்தவன்.

தமிழ் மக்களின் ஆயிரமாயிரம் கோரிக்கைகளுடன் வாழ்ந்தபோதும், அந்தக் கோரிக்கைகளை வென்றெடுக்க மத்திய அரசுக்கு மனு அனுப்பி அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொடுக்காதபோதும், பதவி முடியும் நேரத்தில் சொகுசு வாகனம் வேண்டும் என்று, அமைச்சரவைக்கு கோரிக்கை அனுப்பியவருக்கு, வாகன இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் மறுத்த செய்தியறிந்து, முகத்தில் அடித்தாற்போல் உணர்கையில் நெஞ்சில் சிறு வலி சுமந்தவன்

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் கடுகளவும் பங்களிப்பச் செய்யாமல், கொழும்பில் குதுகலமாக வாழ்ந்துவிட்டு, வடுக்கள் சுமந்து வடக்கில் வாழும் தமிழ் மக்களின் முதுகில் ஏறி வசதியாக சவாரி செய்யலாம் என்று வந்ததோடு மட்டுமல்லாமல், தமிழ் மக்கள் ஏற்கனவே ஏறி விழுந்த நொண்டிக் குதிரைகளிலேயே மீண்டும் அவர்களை ஏற்றும் விதமாக நாளாந்தம் ஒரு அறிக்கை வாசிக்கும் ஆளாகிவிட்ட கூட்டுக் குற்றங்களின் வலி சுமந்தவன்.

(இந்த கட்டுரை ஒரு வாசகரால் எழுதி அனுப்பப்பட்டு 09.10.2018 அன்று எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது.)

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்