வடக்கின் இறுதி ஊர்வலத்தில் விக்கிக்கு புத்தி சொன்ன தவராசா!

கனவான் அரசியல் செய்பவர்களுக்கு அபிவிருத்தி முக்கியமற்றதாக இருக்கலாம். ஆனால், 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தினால் எல்லாவற்றையும் இழந்து தமது வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் மக்களை இன்னும் எவ்வளவு காலத்திற்கு இவ்வாறே இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்கள் என வடக்கு மாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் தவராசா சபையில் கேள்வியெழுப்பியிருந்தார்.

வடக்கு மாகாணசபையின் இறுதி அமர்வு இன்று கைதடியிலுள்ள சபை வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் –

முதலமைச்சர் நிதியத்தை ஆளுநர் அனுமதிக்காததால் தான் எம்மால் புலம் பெயர்ந்தவர்களின் முதலீடுகளைப் பெற்று அபிவிருத்தியை மேற்கொள்ள முடியவில்லையென முதலமைச்சர் தனதுரையில் குறிப்பிட்டார். ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்று கூறியது போலதான் இது அமைகின்றது.
புலம்பெயர்ந்தவர்களின் நிதியினை ஒருங்கிணைத்து அபிவிருத்தி வேலைகள் செய்வதாயின் எத்தனையோ நிதியங்களை ஆரம்பித்து அதனூடாக புலம்பெயர் பங்களிப்பினை ஒன்றிணைத்து செயற்படுத்தியிருக்க முடியும். ஆளுநர் வெளிநாடுகளுக்கு சென்று புலம்பெயர்ந்தவர்களை முதலீடு செய்ய அழைப்பதாக முதலமைச்சர் கூறியிருந்தார். அவர் என்ன ஆளுநர் நிதியத்தை ஏற்படுத்தி விட்டா முதலிட வரும்படி கூறியிருந்தார். புலம்பெயர்ந்தவர்கள் முதலீடு செய்வதற்கு நிதியம் தேவையில்லை.

இனி விட்ட தவறுகள், இழந்த சந்தர்ப்பங்கள், வினைத்திறனற்ற செயற்பாடுகளைஇ அதிகார வரம்புமீறல் மற்றும் துஸ்பிரயோகங்கள் என்பனவற்றில் முக்கியமான சிலவற்றை நினைவூட்ட விரும்புகின்றேன்.

யாழ். கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றல் திட்டத்தினை நிராகரித்து விட்டு மாற்று ஏற்பாடுகளை செய்வதாக் இச்சபையில் அறிவித்திருந்தும், இதுவரை மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாமை கையிலிருந்ததையும் நழுவவிட்ட எமது கெட்டித்தனமாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதிக்கு பெயர் குறிப்பிட்டு ஒர் ஆலோசகரை சிபார்சு செய்ததன் விளைவாக எமக்கு கிடைக்கவிருந்த நிதியினை இழந்து யு.என்டி.பி உடன்; பாரிய முரண்பாட்டை தோற்றுவித்ததன் மூலம் தனிநபருக்காக ஒர் சர்வதேச ஸ்தாபனத்தையே பகைக்கின்ற நிலைக்கு நாம் திறமைசாலிகள் என்பதனை நிருபித்துள்ளோம்.

இந்திய பிரதமர் யாழ்.வந்திருந்த போது எம்மக்களின் துயர்துடைக்க இந்தியாவின் அனுசரணையை வேண்டி நிற்பதற்கு பதிலாக ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் பிரேமானந்த சுவாமி ஆச்சிரமத்தை சேர்ந்த கொலையாளிகள் நான்கு பேரின் விடுதலை தொடர்பாகக் கோரிக்கை விட்டது எம் மக்களின் பிரச்சினைகளில் எமக்கு உண்மையில் எவ்வளவு அக்கறையிருக்கின்றது என்பதனை தெளிவுபடுத்துகின்றது.

மாகாணத்திற்கு வேண்டிய நிதித்தேவைப்பாட்டினை அதன் நியாயப்பாட்டுகளுடன் மத்தியை கோராது இருந்துவிட்டு எமக்கு அரசு போதிய நிதி தருவதில்லையென்ற சபையில் உரக்கக் கூறி எமது இயலாத்தன்மையை மூடிமறைத்துள்ளோம்.

முதலீட்டு வாய்ப்புக்களை ஊக்குவிக்கும் நோக்குடனான பாரிய துறைசார் அபிவிருத்தி திட்டங்கள் எதுவும், சுகாதார அமைச்சினை தவிர, எந்த அமைச்சுக்களினாலோ அல்லது திணைக்களங்களினாலோ மேற்கொள்ளப்படாமை எமது இயலாத்தன்மைக்கு இன்னொரு எடுத்துக்காட்டு.

இதுவரை எம்மால் 15 நியதிச்சட்டங்களே முழுமையாக ஆக்கப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. நியதிச் சட்ட விடயத்தில் நொண்டிக் குதிரைக்கு சறுக்கின சாட்டுப் போல் எமக்கு நியதிச் சட்டங்களை ஆக்குவதற்கு தனியான ஒர் சட்டவரைபு பிரிவினை அரசு ஏற்படுத்திக் கொடுக்கவில்லையென கூறிக்கொண்டிருக்கலாம். ஆனால் வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் சட்டவரைபு நிபுணர்களைக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் எமக்கு உதவ முன்வந்தும் அதனை தட்டிக்கழித்ததே எமது வரலாறு. சபைத்தலைவர் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றார் என்ற ஒர் புதிய கட்டுக்கதையும் இப்போது அவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

நியதிச் சட்டங்களுக்கு அமைவாக ஒழுங்கு விதிகள் சேவைப் பிரமாண குறிப்புகள் என்பன வரையப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட வேண்டும். இதுவரை அது தொடர்பாக எதுவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமை எமது இயலாத்தன்மைக்கு இன்னொரு ஆதாரம்.
லண்டன் மாநகரில் உள்ள கிங்டன் உள்ளுராட்சி மன்றத்திற்கும் அதேபோல் கனடாவிலுள்ள மார்க்கம் நகராட்சிக்கும் இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் எதுவும் செயற்படுத்தப்பட முடியாது என நான் முன்னரே இச்சபையில் சுட்டிக்காட்டியிருந்தேன். இன்று யாராவது அவ்வொப்பந்தங்களில் உள்ள விடயங்கள் ஏதாவது ஒன்று

நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது என்று காட்ட முடியுமா?
ஒரு சிறிய நிர்வாக செயற்பாட்டைக் கூட செயற்படுத்த திறனற்றவர்களாக செயலாளர்களுக்கான சுற்றறிக்கையொன்றை முதலமைச்சரின் கையொப்பத்துடன் அனுப்பி இறுதியில் நீதிமன்றத்தில் அச்சுற்றறிக்கையினை வாபஸ் பெறுவதாக ஒப்புக் கொண்ட பெருமை எம்மைசாரும்.

அரசினால் வழங்கப்படும் மூலதன நிதியினைக் கூட முழுமையாக குறிப்பட்டுள்ள வருடத்திற்குள் செலவழிக்காமல் அந்நிதியினை நிலையான வைப்புகளில் இட்டுவிட்டு நிதி முற்றாக குறிக்கப்பட்ட வேலைத்திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்டு விட்டது என ஆரம்பகாலங்களில் சபைக்கும்; எமக்கு வாக்களித்த மக்களுக்கும் பொய்யான தகவல்களை கூறியதை; கண்டித்து நான கணக்காளர் நாயகத்திற்கு கூட அறிவித்திருந்தேன். என்னுடைய அன்றைய செயற்பாடு தான் தொடர்ச்சியாக அவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுபுள்ளி வைக்க வழிசமைத்தது.

எமது அசட்டைத்தனமான செயற்பாடுகளாலும், சில சேவைகளுக்கான பிரமாணக்குறிப்புக்கள் இன்னும் தயார் செய்யப்படமையினாலும் 3,000க்கும் மேற்பட்ட வெற்றிடங்களை இன்னும் நிரப்பப்படாமல் இருக்கின்றது.

அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையில் சிபார்சு செய்யப்பட்ட சட்டபூர்வமற்ற மற்றும் ஊழல் நடவடிக்கைகள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் தேவையென குறிப்பிடப்பட்டிருந்தும் இதுவiர் அவ்வாறான மேலதிக விசாரணைகளோ நடவடிக்கைகளோ ஏன் மேற்கொள்ளப்படவில்லை என்பது மாகாணசபை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையினை மேலும் இழக்கச் செய்துள்ளது.

வருடத்திற்கு வெறும் 20 மில்லியன் ருபாவை எமது மக்களின் பயன்பாட்டிற்கு பெற ஒப்பந்தமிட்டு பளையின் காற்றலை அமைப்பதற்கு யூலிப்பவர், பீற்றாபவர் என்ற நிறுவனங்களுக்கு அவர்கள் வருடம் ஒன்றுக்கு ஏறத்தாழ 1400 மில்லியன் இலாபத்தை பெறுவதற்கு காணியை வழங்குவதற்கு ஒப்புதலை வழங்கியதன் மூலம் எம்மக்களுக்கு செய்த மகா தவறுக்கு மாகாணசபை என்ன பிரயத்தனம் மேற்கொள்ளப் போகின்றது. இராணுவத்தினரின் பாவனைக்கு தான் காணியை வழங்கவில்லையென முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார். அப்படியெனில் ஏன் பளையின் காற்றாலை அமைப்பதற்கு காணியை வழங்கினீர்கள்?

எம்மால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் எத்தினை பாரிய குற்றச்சாட்டுகள் இருந்தும் அதுதொடாபர்பாக ஏதாவது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா. சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்பான விடயம், மூங்கில் நடுகைத்திட்டத்தினை நிராகரித்தமை, அனுமதி பெறத்தேவையற்ற விடயங்களுக்கெல்லாம் அனுமதி பெற வேண்டுமென ஓரு அமைச்சர் வலியுறுத்தியமை, அதிகார துஸ்பிரயோகங்கள், நிதிமோசடி குற்றச்சாட்டுக்கள் இவை தொடர்பாக தொடர்நடவடிக்கை எடுக்காமை பனங்காட்டு நரியை பாதுகாக்கும் நடவடிக்கைகளாகவே பார்க்க வேண்டியுள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக ஒரு அமைச்சரவையைக் கூட கூட்ட முடியாத நிலைமைக்கு நம்மை நாமே இட்டு சென்றது எமது வினைத்திறனற்ற செயற்பாட்டின் உச்சகட்டமென்றே கருத வேண்டியுள்ளது.

இத்தருணத்தில் நாங்கள் நிறைவேற்றிய பிரேரணைகள் பற்றியும் குறிப்பிட வேண்டும். இதுவரை 444 பிரேரணைகள் நாங்கள் நிறைவேற்றியிருக்கின்றோம். இவற்றில் ஒரு சிலவற்றை தவிர பெரும்பான்மையானவை எதுவித பிரயோசனமற்றவை. எமது சபை நேரத்தை வீணாக்கியதே நாம் கண்டவை. இருந்தும் சபையின் ஐக்கிய செயற்பாட்டிற்கு குந்தகமாக செயற்படக்கூடாது என்பதானாலேயே அப்பிரேரணைகளை நான் எதிர்த்து நிற்கவில்லை. மாகாண சபையின் சில பிரேரணைகள் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சாசனம் வரை தாக்கத்தை கொடுத்திருக்கின்றது என்பதினை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

தொடர்ச்சியாக எமது மாகாண சபை வினைதிறனற்றே செயற்பட்டிருக்கின்றது என்று கூறுகின்றேன் என்று கருதவேண்டாம். அரசியலமைப்பு மாற்றத்துக்கான மாகாணசபையின் வரைவு மற்றும் முதலமைச்சரை பிரதிநிதித்துவப்படுத்தி நான் அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவின் முன்சென்று எம் மக்களுக்கு வேண்டிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக பிரஸ்தாபித்தது மட்டுமல்ல அரசியலமைப்பு மாற்றத்துற்கான மாகாணசபையின் வரைபினை கௌரவ முதலமைச்சருடன் சென்று சபாநாயகரிடம் கொடுப்பதிலும் எனது பங்கை வகித்துள்ளேன். ஆதலினால் எதிர்க்கட்சித்தலைவர் என்பதற்காகவோ, அல்லது அரசியல் காழ்ப்புணர்விலேயோ நான் விடயங்களை எதிர்க்கவில்லை மாறாக எமது பலவீனங்கள் எமது வினைதிறனற்ற செயற்பாடுகள் தவறுகள் இழந்த சந்தர்பங்களை சுட்டிக்காட்டுவதன் மூலம் இந்த மாகாணசபையை வினைதிறனுள்ளதாக செயற்பட வைப்பதற்கு முனைந்துள்ளேன் என்பதனைத் தான் என்னால் கூறி வைக்க முடியும்.
அவைத்தலைவர் அவர்களே, எமது தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்று ஒவ்வொரு விடயத்தினையும் திறந்த கண்ணோட்டத்துடன் அகாமல் அரசியலாக்க முனைந்ததன் விளைவு என்றே கருதக்கூடியதாக இருக்கின்றது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்