வட இலங்கை சங்கீத சபையில் பலகோடி நிதி மோசடி: 22 வருடங்கள் செயற்குழு கூட்டம் நடத்தப்படாது தனி ஒரு குழு கைவரிசை – அதிர்ச்சியில் கலைப் பிரியர்கள்!

வட இலங்கை சங்கீத சபை இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச அளவிலும் இசை இயல் நாடகம் ஆகிய முத்தமிழ்  கலைகளை வளர்த்துவரும் ஒரு பாரம்பரியம் மிக்க சபையாகும்.  இந்த வட இலங்கை சங்கீத சபைக்கு தற்போது வயது 80 நிறைவடைந்துவிட்டது. இந்த வயதுக்கேற்றவாறு நீண்டகாலம் சபையிலே இருந்த மூத்த உறுப்பினர்களும் மறைந்துவிட்டனர்

இந்த சபையினால் வழங்கப்படுகின்ற  சான்றிதழ்கள் மிகவும் தரம்வாய்ந்தவை. ஏனெனில் இந்தசபை ஒரு அரச சபையாக காணப்படுவதுடன் ஒன்று தொடக்கம் ஆறுவரை தரங்கள் கொண்ட அவைக்காற்றுகையுடன் கூடிய சான்றிதழ்கள் வழங்கப்படுவதால் இதன் தரம் வலிமை பெற்று விளங்குகின்றது.

அத்தகைய தரம் மிக்க இந்த சபையின் யாப்பின் பிரகாரம் பதவி வழித் தலைவர்களாக யாழ்ப்பாணம் வலய கல்விப்பணிப்பாளர்களே காலாகாலமாக இருந்துவருகின்றனர். அதுமட்டுமல்லாது பதவி வழியாக யாழ் வலயக் கல்விப்பணிப்பாளர் பணிமனையின் கணக்காளரே சபையின் கணக்குவழக்குகளை ஒழுங்குபடுத்துகின்றார். இதனால் சபையினுடைய சட்டரீதியான நிதி அதிகாரியாகவும் யாழ் வலயக் கல்விப் பணிப்பாளரே காணப்படுகின்றார்.

1996 ஆம் ஆண்டே இந்த சபையின் பொதுச்சபை கூட்டம் இறுதியாக கூட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது.

அன்றையதினம் குறித்த நிதியாண்டின் கணக்கு அறிக்கை காட்சிப்படுத்தப்படவில்லை. இதனால் மிகுந்த ரகளைகளுடன் குறித்த கூட்டம் நிறைவுக்கு வந்ததாக சொல்லப்படுகின்றது.

சுமார் 22 வருடகாலமாக உத்தியோகபூர்வமாக பொதுச்சபை கூட்டம் நடத்தப்படாமல் இந்த சபை அரச ஆதரவுடன் இயங்கிவந்ததையிட்டு பலரும் மிகுந்த விசனம் தெரிவித்திருந்தனர்.

காலத்துக்கு காலம் வந்துசென்ற யாழ் வலயக் கல்விப்பணிப்பாளர்கள்கூட சபை அங்கத்தவர்களது தாளத்திற்கு ஆடி சபையின் பொதுச்சபை கூட்டத்தை நடத்தாது ஒத்திவைத்துவந்தனர்.

ஆனால் இவற்றை எல்லாம் மீறி தற்போதைய யாழ் வலயக் கல்விப்பணிப்பாளர் சு.சுந்தரசிவம்  கடந்த 04.11.2018 அன்று குறித்த சபைக்கான பொதுக்குழு கூட்டத்தை அதிரடியாக அறிவித்திருந்தார்.

அதை தடுத்து நிறுத்தி வழமைபோல தம்முடைய கைவரிசையை காட்ட அப்போதைய நிர்வாக சபை செயலாளரும் தற்போதைய சங்கீத விற்பன்னர்களாக கூவித்திரியும் சங்கீத பூஞ்சணங்களும் மிகுந்த பிரயத்தனம் செய்தனர்.

ஆனால் கல்விப்பணிப்பாளர் சுந்தரசிவம் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரது அனுசரணையுடன் வடமாகாண கல்விப் பணிப்பாளருடைய பணிப்புரையின் கீழ் சபை யாப்பு விதிகளுக்கு அமைவாக பொதுக் கூட்டத்தை ஜனநாயக வழிமுறையில் நடத்தி புதிய நிர்வாக குழுவை தெரிவு செய்துள்ளார்.

இந்த வரலாற்று சாதனையை பொறுக்க முடியாத முன்னைய நிர்வாகத்தின் செயலாளரும் யாழ் கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாலயத்தின் அதிபருமான சிவராசானும் அவரது குழுவினரும் சட்டவிரோதமாக சபை கட்டடத்தையும் நிதி நிர்வாக ஆவணங்களின் பொறுப்புக்களையும் கையளிக்காது அரச சேவைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் ஊழல் மோசடிகளை மேற்கொண்டு சபையை சந்தி சிரிக்க செய்து வருகின்றனர்.

தற்சமயம் மருதனார்மடத்தில் காணப்படும் சபையின் தலைமை கட்டடத்தை உத்தியோகபூர்வ ரசீதுகள் ஏதும் வழங்காது களியாட்ட நிகழ்வுகளுக்கு வாடகைக்கு கொடுத்து நிதி அறவிட்டு வருகின்றனர். சபையின் தலைவராகிய யாழ் வலயக் கல்விப்பணிப்பாளருக்கு கட்டுப்படாது மூத்த கலைஞர்கள் தாம் என்று கூறி நிதி மோசடிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் வட இலங்கை சங்கீத சபையின் தற்போதைய நிர்வாகம் எந்தவிதத்திலும் பொறுப்புக்கூறப் போவதில்லை.

இதனிடையே சாதாரண உறுப்பினராக இருந்த சிவராசன் சபைக்கான பொதுக்குழு கூட்டம் கூட்டப்படாத நிலையில் எவ்வாறு நிர்வாக சபை உறுப்பினராக தெரிவானார்?

எவ்வாறு உபசெயலாளரானார்? இவை எல்லாவற்றையும் விட அவர் எவ்வாறு நிர்வாக செயலாளரானார்? என்பதே இன்று பலரது கேள்வியாக உள்ளது.

அந்தவகையில் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள  கலை உடன்பிறப்புக்களே! இந்த மோசடிப் பேர்வழியின் தலைமையில் இயங்கும் போலிவட இலங்கை சங்கீத சபையிடம் தொடர்புகொண்டு எந்த ஒரு சான்றிதளையோ அன்றி நிதிக் கையளிப்பக்களையோ அல்லது பரீட்சை பெறுபெறுகளையோ, பரீட்சைகளையோ நடத்த முடியாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

இது தொடர்பில் உண்மை தன்மையை அறிய சபையின் தலைவராகிய யாழ் கல்விப்பணிப்பாளரையோ அன்றி வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரையோ அல்லது வடமாகாண கல்விப் பணிப்பாளரையோ  தற்போதைய நிர்வாகத்தின் உபதலைவர் செயலாளர் பொருளாளர் போன்றோரை தொடர்பு கொள்ளுங்கள். இதுவே சபையின் எதிர்காலத்திற்கு சிறப்பாகும்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்