உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்குள் பாகுபாடா? குழப்பத்தில் சபை உறுப்பினர்கள்!

இம்முறை நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் மூலம் தெரிவான உறுப்பினர்களில் விகிதாசார முறையில் உள்வாங்கப்பட்ட உறுப்பினர்களுக்ககும் நேரடியாக சென்ற உறுப்பினர்களுக்கும் சம அந்தஸ்து சபைகளில் கொடுப்பதில்லை என பலரால் குற்றம் சாட்டப்படுவதுடன் இவ்வாறான ஒரு நிலை ஏன் உருவாகுகின்றது என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

புதிய உள்ளூராட்சி சபை தேர்தல் முறைமையின் பிரகாரம் குறித்த தேர்தலில் உறுப்பினர்களை தேர்வு செய்வது தொடர்பில் இம்முறை மாற்றம் கொண்டுவரப்பட்டது.

வட்டார முறையிலான இந்த தேர்தல் முறைமையினால் தேர்வாகும் உறுப்பினர்கள் குறைந்தளவானதாக காணப்படுவதால் அப் பிரதேசங்களின் அபிவிருத்தி முடக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக காணப்பட்டன.

இதனால் மக்கள் பிரதிநிதிகளது பங்களிப்பை மேலும் சற்று அதிகரிக்கும் நோக்கிலும் பெண்களுக்கான வகிபங்கை அதிகரிப்பதற்கான நோக்கிலும் தேர்தல் விதிமுறையில் மாற்றம் உள்வாங்கப்பட்டு உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடைபெற்றது.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு பிரதேச சபைகளிலும் அந்தந்த பிரதேசத்தை வரையறுக்கும் வட்டாரங்களினது எண்ணிக்கைக்கும் ஏற்ப குறித்த வட்டாரங்களை முன்னிறுத்திய வேட்பாளர்களும் மேலதிகமாக அதன் 40 வீதம் விகிதாசார உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்படுவர் என உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டம் மூலம் வரையறை செய்யப்பட்டது.

இதனடிப்படையில் ஒரு பிரதேசத்தில் 12 வட்டாரங்கள் காணப்படுமாயின் அதற்கு 12 வேட்பாளர்களும் மேலதிகமாக அந்த வட்டாரங்களின் எண்ணிக்கையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அதாவது 8 உறுப்பினர்கள் விகிதாசார முறைமூலம் உள்வாங்கப்பட்டு மொத்தமாக 20 உறுப்பினர்கள் அந்த சபையின் மொத்த உறுப்பினர்களாக சபையை பிரதிநிதித்துவப்படுத்துவர்.

அத்துடன் அச்சபையின் மொத்த உறுப்பினர்கள் 20 பேரதும் அதிகாரம் சமமானதாகவே காணப்படும். அதுமட்டுமன்றி சபையால் ஒதுக்கப்படும் அனைத்து ஒதுக்கீடுகளும் செயற்பாடுகளும் அனைத்து உறுப்பினர்களுக்கும் சமனானதாகவே அமையும்.

அத்துடன் விகிதாசார முறை உறுப்பினர்களுக்கு அப்பிரதேச சபையில் அதிகாரம் சற்று அதிகமாகவே காணப்படுகின்றது எனலாம். அதாவது வட்டாரங்களை பிரதிநிதித்துவம் செய்த உறுப்பினர்கள் தத்தமது வட்டாரங்களுக்குள்ளேயே மட்டுப்படுத்தப்படுகின்ற அதேவேளை விகிதாசார உறுப்பினர்கள் தத்தமது வட்டாரங்களுடன் அப்பிரதேச சபை  முழுவதும் தமது அதிகாரத்தை செலுத்த கூடியதாக காணப்படுகின்றது.

ஆனாலும் யாழ்ப்பாணத்திலுள்ள பல சபைகளில் உள்ள உறுப்பினரிடையே குறிப்பாக தத்தமது கட்சிக்குள்ளேயே இந்த விளக்க நிலை இல்லாது சக உறுப்பினர்களுடன் முரண்படுவதையும் சபைகளில் நான் நேரடி உறுப்பினர்,  நீ விகிதாசார உறுப்பினர் என்றும் சபை ஒதுக்கீடுகள் வழங்கப்படும்போது வட்டார ரீதியில் பல சபைகளில் ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுவதால் விகிதாசார உறுப்பினர்களுக்கு எந்த ஒரு ஒதுக்கீடுகளும் கிடைக்காது போகும் நிலைமை காணப்படுகின்றது.

அதன்பிரகாரம் குறித்த ஒரு வட்டாரத்தில் குறித்த ஒரு கட்சி வேட்பாளர் நேரடியாக வெற்றிபெற்றிருக்கும் நிலையில் விகிதாசார முறையின் பிரகாரம் ஆளும் கட்சி உறுப்பினர்களும் இதர கட்சிகளின் உறுப்பினர்கள் சிலரும் அதே வட்டாரம் ஒன்றிற்கு உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது நிலை என்ன?

இதனால் அவர்கள் தாம் பிரதிநிதித்துவம் செய்யும் வட்டாரங்களையோ அன்றி அப்பிரதேசத்தின் செயற்பாடுகளையோ மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படாது முடக்கப்படுகின்ற நிலை உருவாகுகின்றது.

உள்ளூராட்சி மன்றங்களை பொறுத்தளவில் மக்களின் அபிவிருத்தி சார்ந்த திட்டங்களே அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்றது. அந்த வகையில் ஒவ்வொரு பிரதிநிதியும் மக்கள் நலனை முன்னிறுத்தியே தத்தமது வேலைத்திட்டங்களை முன்னெடுப்பர். இச்சபையில் இவ்வாறான பாகுபாடுகள் காட்டப்படுவதால் விகிதாசார உறுப்பினர்களின் வகிபாகு என்ன என்ற கேள்வியும் எழுகின்றது.

இதைவிட சபையின் செயற்பாடுகளை வட்டார ரீதியாக வகைப்படுத்துவதால் அச்சபையின் நேரடியான வட்டார உறுப்பினர்கள் மட்டும் தான் நன்மைகளை பெற முடிகின்றது.

உதாரணமாக யாழ் மாநகர சபையை எடுத்துக்கொண்டால் 27 வட்டாரங்கள் காணப்படுகின்றன. இதனடிப்படையில் 27 உறுப்பினர்கள் நேரடியாக உள்வாங்கப்பட்டனர் வட்டாரங்களின் முழுத் தொகையின்  மூன்றில் இரண்டு பங்கு என்ற விகிதாசார முறைப்படி விகிதாசார உறுப்பினர்களாக 18 உறுப்பினர்கள் உள்ளனர்.

ஆனால் இம்முறை மாநகரின் பாதீட்டில் 27 வட்டாரங்களுக்கென தலா 3.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வட்டார ரீதியாக வென்ற உறுப்பினர்களுக்கு அந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

அப்படியாயின் ஏனைய 18 விகிதாசார உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடு எவ்வாறு கிடைக்கப்பெறவுள்ளது. அல்லது அவர்கள் மக்கள் பிரதிநிதிகள் இல்லையா? என்ற கேள்வி எழுகின்றது. இதற்கு தீர்வு எவ்வாறு கிடைக்கப்போகின்றது என்ற கேள்வியும் பலரது மனங்களில் எழுகின்றது.

இந்நிலையில் யாழ். மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் விகிதாசார முறை உறுப்பினர்களுக்கு சபையின் செயற்பாடுகளில் பாகுபாடு காட்டப்படுவதுடன் அவமதிப்புக்களும் நடைபெறுவதாக உள்ளூராட்சி மன்றங்களின் விகிதாசார உறுப்பினர்கள் பலர் மனவேதனை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் இந்த பாரபட்சமான நடைமுறைக்கு தீர்வு கிடைக்குமா என்பதே இன்றுள்ள கேள்வி.

 

 

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்