ஊடகவியலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் யாழ் மாநகரசபை : ஆளுமையற்ற ஆட்சியே காரணம் என்கின்றனர் புத்திஜீவிகள்!

யாழ். மாநகரசபையின் மாதாந்த மற்றும் விசேட அமர்வுகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதாயின் குறித்த ஒவ்வொரு அமர்வின் போதும் யாழ். மாநகர முதல்வர் ஆர்னோல்டிடம் எழுத்து மூல அனுமதி பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதானது முதல்வரின் ஆளுமையீனம் வெளிப்படுகின்றது என்ற காரணத்தினால் திட்டமிட்ட வகையில் கொண்டுவரப்பட்ட நடவடிக்கை என பரவலாக பேசப்படுகின்றது.

யாழ். மாநகரசபையின் மாதாந்த, விசேட கூட்ட அமர்வுகளினை பார்வையிடுவதற்கு வருகின்ற பார்வையாளர்கள் மற்றும் செய்தி சேகரிப்பதற்காக வருகின்ற ஊடகவியலாளர்கள் ஆகியோர் ஒவ்வொரு அமர்வுகளின் போதும் மாநகர முதல்வரிடமிருந்து எழுத்து மூல முன்னனுமதியை பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

யாழ். மாநகரசபையின் மாதாந்த பொதுக்கூட்ட, விசேட கூட்ட அமர்வுகளின்போது முதல்வர், பிரதி முதல்வர், உறுப்பினர்கள், மாநகரசபை அமர்வுகளுடன் தொடர்புடைய மாநகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் தவிர்ந்த வேறு எவரும் மாநகர சபா மண்டபத்தினுள் உள்நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல் வழங்கப்படுவது சரியாக இருந்தாலும் இதை வருடம் ஒன்றுக்கான முழுமையான அனுமதியாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் முதல்வர் ஆர்னோல்ட் அதாவது ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடுபோடுவதாக சொல்லி மாநகரின் செய்திகள் எதுவும் வெளிவரக் கூடாது என்று திட்டமிட்டே இவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் என கூறப்படுகின்றது.

ஏனெனில் சபையில் நடக்கும் கேலிக்கூத்தான விடயங்களை ஊடகவியலாளர்கள் வெளிக்கொண்டுவருவதால் ஒவ்வொரு கூட்டத்திற்கும் அனுமதி பெறவேண்டும் என சட்டம் கொண்டுவரப்பட்டால் ஊடக நிறுவனங்கள் அதை சிரமமாக எடுத்துக் கொள்ளும் என்றும் அதனூடாக ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க வரமாட்டார்கள் என்றும் ஆர்னோல்ட் எண்ணியே இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை பாராளுமன்றானாலும் சரி மாகாணசபையானாலும் சரி ஏன் பல பிரதேச சபைகளில் கூட ஊடகவியலாளர்களுக்கு வருடத்துக்கான அனுமதியே வழங்கப்படும் நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் உப்புச் சப்பற்ற விவாதங்களையும் சுயநல செயற்பாடுகளையும் மேற்கொண்டுவரும் ஆளுமையற்ற யாழ் மாநகரசபை தனது குறைபாடுகள் வெளிக்கொணரக் கூடாது என்ற எண்ணத்துடன் இவ்வாறான திட்டத்தை உருவாக்கியுள்ளனர் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்