ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு தூதரகங்களுக்கு மர்ம பார்சல்: ஒருவர் கைதானார்

ஆஸ்திரேலியாவில் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு வெள்ளை நிற மர்மப் பொடி நிரப்பிய கடிதங்கள் அனுப்பப்பட்டது தொடர்பாக 48 வயது நபரை போலீஸார் கைது செயதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது
தலைநகர் கான்பெரா மற்றும் மெல்போர்ன் நகரங்களிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு மர்மப் பொடி அடங்கிய கடிதங்கள் அனுப்பப்பட்டது தொடர்பாக, சவாஸ் அவான் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஷெப்பர்டன் நகரிலுள்ள சவாஸ் அவானின் இல்லத்தில், புதன்கிழமை இரவு அவரை போலீஸார் கைது செய்தனர்.
அவர் மீது, ஆபத்தான பொருள்களை அஞ்சலில் அனுப்பிய குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், சவாஸ் அவானுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மர்மப் பொருள் அடங்கிய 38 பார்சல்களை அவர் அனுப்பியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அவையனைத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவத்தால் பொதுமக்களுக்கு இனி எந்த ஆபத்தும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மர்ம பார்சலில் இருந்த பொருள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அது ஆஸ்பெஸ்டாஸாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

ஆஸ்திரேலியாவின் கான்பெரா மற்றும் மெல்போர்ன் நகரிலுள்ள 10 வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களுக்கு மர்ம பொருள் அடங்கிய கடிதங்கள் புதன்கிழமை வந்தன.

சிலவற்றில் ஆஸ்பெஸ்டாஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்த அந்த கடிதங்களில், மர்மமான வெள்ளை நிறப் பொடி வைக்கப்பட்டிருந்தது.
இதனால் எச்சரிக்கை அடைந்த போலீஸார், அந்த தூதரகங்களில் இருந்த அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். தூதரகத்தில் இருந்தவர்கள் பலருக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
மெல்போர்ன் நகரிலுள்ள இந்திய துணைத் தூதரகத்துக்கும் இந்த மர்ம பார்சல் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், பிரிட்டன், தென் கொரியா, ஜெர்மனி, இத்தாலி, ஸ்விட்சர்லாந்து, பாகிஸ்தான், கிரீஸ், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்களுக்கும் மர்மப் பொடி அடங்கிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்