சீனாவின் சுரங்க விபத்தில் 21 பேர் பலி

சீனாவில் சனிக்கிழமை நிகழ்ந்த சுரங்க விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் ஷின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் உள்ள லிஜியாகோவ் நிலக்கரி சுரங்கத்தில் சனிக்கிழமை பிற்பகலில் விபத்து நேரிட்டது. சுரங்கத்தின் மேல் பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 87 பேர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இதையடுத்து, தீயணைப்பு படையினர் மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கினர். முன்னதாக, 19 பேர் உடல்கள் மீட்கப்பட்டு 66 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் இருவரது உடல்களை மீட்புக் குழுவினர் சுரங்கத்திலிருந்து மீட்டனர். இதையடுத்து, சுரங்க விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21-ஆனது.
சுரங்கத்தின் மேல் பகுதி திடீரென இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

நிலக்கரி உற்பத்தியில் சீனா முன்னிலையில் உள்ளது. எனவே, அங்கு சுரங்க விபத்துக்கள் வழக்கமான நிகழ்வாகவே பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அரசு மேற்கொண்ட சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் அண்மைக் காலமாக அங்கு சுரங்க விபத்து ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்